Thursday, May 21, 2015

கோயில் உண்டியலை உடைத்து திருடிய இருவர் கைது

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சந்தேகநபர்கள் இருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை (20) கைது செய்ததாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஆலையடிவேம்பு புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின் இன்று வியாழக்கிழமை (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திருட்டு சம்பவம் இம்மாதம் 1ஆம்; திகதி இரவு இடம்பெற்றதாகவும் இந்த மாதத்துக்குள் இதுவரை ஆலையடி வேம்பு பிரதேசத்தில் நான்கு கோயில்களில் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் பலியாகியுள்ளதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பனங்காட்டைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயகுமார் என்பவரே பலியாகியுள்ளார்.
தம்பட்டை பகுதியிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அருகில் சென்ற துவிச்சக்கரவண்டியுடன் மோதிக் கொண்டதினாலேயே, இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday, May 20, 2015

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதேச அலுவலகம் அங்குரார்ப்பணம்

பிரேம்...


ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதிநிதிகளாகச் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு அலுவலகம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் இன்று, 20-05-2015 புதன்கிழமை காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரது தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்த இவ்வைபவத்தில் சமய அனுஸ்டானங்களுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.

ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட 22 கிராமசேவகர் பிரிவுகளுக்குமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜி.தயாபரன், கே.ரஞ்சித்குமார் மற்றும் கே.செல்வானந்தம் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் பூர்த்தி செய்துகொள்ளவேண்டிய அடிப்படைத் தேவைப்பாடுகள், பின்பற்றவேண்டிய சட்ட வரையறைகள் என்பன தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சார்பில் முகவர்களாகச் செயற்பட்டு அதன் பணிகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துபவர்களாகப் பணியாற்றிவருவதுடன், குறித்த பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடு சென்றவர்களின் குடும்ப நலநோம்பல்களைக் கண்காணித்து பிரதேச செயலாளரூடாக அமைச்சுக்கு அறிக்கையிடுபவர்களாகவும் செயற்பட்டுவருகின்றனர்.

இருப்பினும் தமது கடமைகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினூடாக வெளிநாடு செல்வோரைச் சந்தித்தல், அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரகசியத்தன்மையினைப் பேணும்பொருட்டு தனியானதொரு அலுவலகம் தமக்கு அவசியமென ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலக வளாகத்தில் அவர்களுக்குத் தனியான அலுவலகம் ஒதுக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டதுடன் இன்றைய நிகழ்வைச் சிறப்பிக்கும்வகையில் தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த பெண்களுக்கு இலவச சேலைகளை அன்பளிப்பாக வழங்கும் வைபவம் அங்கு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.